பக்கம் எண் :

202கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

மின்காட்டும் நச்சரவம் மலியுங் காட்டை
       மேம்படுத்தச் செப்பனிட வழிய மைத்தார்.

வாஞ்சையினால் நம்பெரியார் செப்ப னிட்டு
       வழியமைக்கப் பாடுபடுந் திறத்தைக் கண்டு
காஞ்சிக்கும் ஈரோட்டுப் பாச றைக்கும்
       கற்றறிந்த நம்அண்ணா வழிய மைத்தார்;
தேன்சிதறும் பூஞ்சோலை பலப டைத்தார்;
       தெளிநீரைத் தருகிணறும் ஆக்கி வைத்தார்;
தீஞ்சுவைசேர் கனிமரங்கள் பலவும் வைத்தார்;
       சேர்ந்திளைஞர் அணிவகுத்து நடந்து வந்தார்.

உறுதிகொளும் நல்லிளைஞர் நடக்குங் காலை
       உதவாத வவ்வால்கள் பறந்து வந்தே
உறுகனிகள் பலசுவைத்துப் பறக்கக் கண்டோம்;
       ஒளிந்திருந்த கள்வர்சிலர் சமயம் பார்த்துப்
பொருள்பலவும் திருடிக்கொண் டோடக்கண்டோம்;
       பொறுமையிலார் இடையிடையே தொல்லை தந்து
பொறுமுவதும் கேட்டிருந்தோம் எனினும் அண்ணன்
       புதுவழியில் நடப்பதைநாம் நிறுத்த வில்லை.

திருவிடத்தின் பெருமையினை மீண்டும் காணத்
       தெளிந்துணர்ந்து சிந்தித்துக் காஞ்சி அண்ணன்
ஒருவழிதான் நமக்கெல்லாம் எடுத்து ரைத்தார்;
       உயர்தமிழும் தமிழினமும் உய்ய வேண்டி
இருவழியைக் காட்டவில்லை; குழப்ப வில்லை;
       ஏகஇந்தி யாவென்று மழுப்ப வில்லை;
வரும்வழியில் திசைமாறிப் போன மாந்தர்
       வாயுளறல் சிரிப்புக்கே வழியைக் காட்டும்.

மடமையினைத் தகர்த்தெறிந்து சிந்தித் தாய்ந்து
       மதிதன்னை வளர்க்கும்வழி, நலமே சேர்க்கும்
கடமைவழி, கண்ணியமும் கட்டுப் பாடும்
       கலந்தவழி, கருணைவழி, பண்பும் அன்பும்