மண்ணாளும் உரிமையினைக் கலைத்த போதும் மனைமக்கள் தமக்கிடர்கள் விளைத்த போதும் எண்ணாத சிறைக்கூடம் வதைத்த போதும் எந்நாளும் உழைத்திருப்போம் வெற்றி கொள்வோம். அடிவயிற்றில் எமைமிதித்துக் கொன்ற போதும் அவர்காட்டும் வழியில்தான் செல்வோம் நாங்கள் அடிபட்டு மிதிபட்டுத் துயர்கள் உற்றும் அயராமல் உழைத்திடுவோம்; இரண்டு வண்ணக் கொடிகட்டி அதன்நிழலில் தொடர்ந்து நின்று குறிக்கோளை நோக்கித்தான் பயணம் செய்வோம்; மடியட்டும் எமதுயிர்கள் அஞ்ச மாட்டோம் மறிக்கட்டும் எமைப்பகைகள் விலக்கிச் செல்வோம். தம்பிகரு ணாநிதியும் எம்மோ டுள்ளார்; தலைமகனார் வழியில்தான் செல்லு கின்றார்; வெம்பிஎழும் புலிமறவர் இங்கே வுள்ளார்; வீரமகன் வழியில்தான் செல்லு கின்றோம்; கும்பியினை வளர்ப்பவர்கள் குரைத்து விட்டால் கொள்கைவழித் தொடராமல் நின்றா போவோம் நம்பிவரும் நல்லவர்கள் இங்கே வுள்ளார்; நம்அண்ணன் அமைத்தவழி தொடர்ந்து செல்வோம். அண்ணாவைப் போற்றுவது கடமை என்றால் அவர்தம்பி கலைஞரையும் போற்ற வேண்டும்; அண்ணாவைத் தலைவரென ஏற்றுக் கொண்டால் அவர்தம்பி கலைஞரையும் ஏற்க வேண்டும்; அண்ணாவின் சொல்லெல்லாம் மதிப்ப தென்றால் அவர்தம்பி கலைஞர்மொழி மதிக்க வேண்டும் அண்ணாவின் கொள்கைவழி நடப்ப தென்றால் அவர்தம்பி கலைஞர்வழி நடக்க வேண்டும். அண்ணா பிறந்த நாள் விழா. சென்னை 17.9.1978 |