பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்23

வில்வளையச் செய்வதுபோல் மேனி வளைவுபடக்
காட்டும் படத்தைக் கவர்ச்சிப் படமென்று
போட்டுப் பொருள்பறிக்கும் புன்மைகள் வாழுலகில்
பெண்மை உயர்ந்திடுமோ? பேணுமுயர் கற்புநெறி
திண்மை அடைந்திடுமோ? தீமைதரும் அவ்விதழே
நாட்டில் விலையாகும் நாகரிகம் காணுகின்றேன்
கேட்டை விளைவிக்கும் கீழ்மைமிகும் இந்நாளில்
என்பெயரைச் சொல்லி எடுக்குந் திருநாளால்
இன்பமது எள்ளவும் என்மனத்தே தோன்றவில்லை;
கொள்கை விளக்குங் குறள்நெறியில் ஒன்றேனும்
உள்ளி நடந்தால் உளத்தே மகிழ்ந்திடுவேன்
நல்வாழ்வு வாழத்தான் நான்தந்தேன் முப்பாலை
அல்வாழ்வு வாழத்தான் ஆரும் விழைகின்றார்;
வேண்டு வேண்டாவா வேதக் குறள்நூலென்
றீண்டுமொழிப் போர்தொடுக்க என்மக்கள் வந்துள்ளார்
இந்த இழிநிலைக்கோ இன்பக் குறள்தந்தேன்
வெந்துயரில் ஏனோ விழுந்து மடிகின்றார்?
செந்தமிழைப் பாடிச் சிறப்புறுத்த வந்தவனே!
இந்த நிலைமாற்ற ஏடெடுத்துப் பாட்டெழுது;
தென்னாட்டுப் பண்பாடு தேய்ந்தழிந்து போகாமல்
நன்பாட்டு வல்லமையால் நாகரிகப் பாட்டெழுது
பின்பாட்டுப் பாடிப் பிழைக்காதே நின்பாட்டை
முன்பாட்டாக் கொள்ள முனைந்தெழுக’ என்றுரைத்தான்;
தெள்ளுதமிழ்ப் பாவலன் தேன்மொழியைக் கேட்டுணர்ந்து
வள்ளுவன் தாள்மலரை வாழ்த்தித் தொழுதெழுந்து
ஐயா சிறியேன்நான் ஆணை தலைக்கொண்டேன்
உய்யா திருக்கும் உலகமினி உய்யுமென
வாய்விட்டுச் சொன்னேன்; வழியும் வியர்வையினால்
பாய்விட் டெழுந்தேன் பகற்கனவு கண்டுள்ளேன்
பட்டப் பகற்பொழுதில் பாவலர்க்குத் தோன்றுமிது
நெட்டைக் கனவின் நிழல்.