வெவ்வினைகள் எவ்வளவோ! அடடா அந்த விளையாட்டின் திறமெல்லாம் விளம்ப எண்ணின் அவ்வளவும் சொல்வதற்கு வள்ளு வற்கும் அடங்காது போய்நிற்கும் அவனும் தோற்பான். உலகியலின் கூறெல்லாம் ஆய்ந்து ணர்ந்தோன், ஒப்பற்ற பேரறிஞன், முப்பால் சொல்லி இலகுபுகழ் கொண்டொளிரும் ஆசான், வாழ்வை இன்பமென எடுத்துரைத்தான்; அதனை விட்டு விலகுநெறி தனிற்புகுந்தோம் மாயம் என்ற வெற்றுரையை நம்புகின்றோம் அதனால் வாழ்வை பலதுயரம் நிறைந்ததொரு கூடம் என்றே பாழ்நெஞ்சில் நினைந்துவிட்டோம் தாழ்வே கொண்டோம். ஆற்றுக்குக் கரையிரண்டு வேண்டு மன்றோ? அதுபோல வாழ்வுக்கும் கரைகள் வேண்டும்; ஏற்றமிகும் ஒருகரைதான் இன்பம் ஆகும் இணையான மறுகரைதான் துன்பம் ஆகும்; காற்றுக்குள் இரண்டுண்டு; தென்றல் ஒன்று கடுகிவரும் வாடைஒன்று; வாடை கண்டு காற்றைத்தான் வெறுப்பதுண்டோ? வாழ்வில் துன்பம் கலந்துவரும் நிலைகண்டு வெறுத்தல் நன்றோ? வாடைஎனுங் காற்றுவரின் போர்வை கொண்டு வருந்தாமல் நடுங்காமல் தடுத்துக் காப்போம்; தேடரிய வாழ்வுதனில் துன்பம் வந்து சேருங்கால் துவளாமல் ஊக்கங் கொண்டு பாடுபட அத்துன்பம் விலகிப் போகும்; பாருய்ய வந்தவனாம் வள்ளு வன்சொல் ஏடதனில் இவ்வுண்மை நன்கு தோன்றும் இடுக்கண்கள் வருங்காலை நகுதல் வேண்டும். |