பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்31

உடையவரும், வடநாட்டுக் கொண்டை யிட்ட
       உடல்வலிமை கொண்டவரும் அங்கு நின்றார்.

நகைக்கின்ற பெரியீரே நீவி ரெல்லாம்
       நானறியப் புகல்வீரோ யாவிர் என்று?
திகைக்கின்றேன் அருள்புரிக என்றேன்; ‘எம்மைத்
       தெரியாயோ? வள்ளுவர்தாம் நாங்கள்’ என்றார்;
வகைக்கொருவர் நிற்கின்றார்; எத்து ணைப்பேர்
       வள்ளுவர்கள்? *என்றயிர்க்குங் காலை மற்றோர்
நகைப்பொலியும் என்செவியிற் கேட்ட தங்கே
       நான்நின்றேன் அவரெல்லாம் மறைந்து விட்டார்.

நகைத்தவர்யார் எனவினவி நின்றேன்; ஆங்கே
       ‘நான்’ என்ற விடைகேட்டேன் உருவ மில்லை;
‘திகைக்காதே வள்ளுவன்நான், உன்றன் நெஞ்சுள்
       சிரிக்கின்றேன், என்னுருவங் காணாய் தம்பி,
உகைத்தெழும்பும் உணர்வுடனே யாங்கு வந்தாய்?
       உன்விழைவு யா’தென்றான்; வணங்கி நின்று
பகைப்புலத்தர் சூழ்ச்சிஎலாங் கடந்து வந்த
       பாவலனே உனையொன்று வேண்டு கின்றேன்.

காலமெலாந் துன்பங்கள் சூழ்ந்த போதும்
       கவலையிலா மனிதனென வாழ வேண்டும்;
ஞாலமெலாம் ஆள்பவனே! தீமை ஒன்றும்
       நண்ணாமல் வாழ்வெல்லாம் இயங்க வேண்டும்;
மேலவனே! வழிபுகல்வாய் என்றேன்; ‘தம்பி!
       மேதினியில் அறநூல்கள் காட்டு கின்ற
சீலநெறி செல்வோhக்குக் கவலை யில்லை,
       சிறுமையில்லை என்றென்றுந் தீமை யில்லை.’


*அயிர்க்குங்கால் - ஐயப்படும் போது