ஓட்டிடுக! அறங்களிலே சிறந்த தொன்று துறவறமா? இல்லறமா? உரைக்க என்றேன்; ‘ஏட்டிலதைப் பார்த்திலையோ? எல்லா ஏடும் அறமென்ப தில்வாழ்க்கை ஒன்றே தம்பி’ ‘மாலையிட்ட மங்கையினை வஞ்சி யாமல் மனம்விரும்பி இனியசொலி ஒன்று பட்டுக் காலையிளம் பரிதியெனக் குழந்தை பெற்றுக் கழறுகிற மழலைமொழி கேட்கும் இன்பம் போலவரும் இன்பமிங்கே ஒன்றும் இல்லை! புரியாத தெரியாத உலகம் வேண்டிக் கோலமது தவசியென வேட மிட்டுக் கொடுமைசெயல் அறமன்று; தெளிக சிந்தை’ ‘இல்லறத்தைச் செம்மையுற ஆற்று கின்றோன் இருநிலத்துப் பயனனைத்தும் பெற்று வாழ்வான்; நல்லறத்தை விட்டுநின்று காவி தாங்கி நடப்பதனால் நல்லபயன் ஒன்று மில்லை; இல்லறத்து நெறிநிற்போன், துறவ றத்தில் இருந்துதவம் நோற்பாரின் நோன்மை கொள்வான்; கல்லடுத்த காடெதற்கு? தவமெ தற்கு? கருணைதரும் இல்லறமே மேலாம்’ என்றான். அறப்போர்க்குப் பொருள்தெரிய வேண்டும் ஐயா! அல்லல்தரும் செயலன்றோ போரில் உண்டு; மறப்போரை அறஞ்சேர்த்து வழங்கல் ஏனோ? மக்களதைச் செயநினைதல் நன்றோ? என்றேன்; ‘மறப்போர்தான் பிறருயிரை எடுப்ப தாகும் அறப்போரோ தன்னுயிரைக் கொடுப்ப தாகும்; |