40 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
மருளகற்றும் குறளமுதைக் குழுமி நின்று மாநிலத்து மாந்திநலந் துய்த்து வாழ்வோம். அறஞ்சொன்னான் பொருள்சொன்னான் அதனோ டன்றி ஆருயிர்கள் தளிர்ப்பதற்குக் காமஞ் சொல்லி அறம்பிறழா அகத்துறையும் சொல்லி வைத்தான் அத்துறையில் வள்ளுவன்றன் வித்த கத்தின் திறங்கண்டு துய்ப்பதற்குப் புலமை வேண்டும்; தீதில்லா நெறிமுறையிற் காமஞ் சொன்னான் உரங்கொண்ட பேரறிஞன் காதற் பாடல் ஒவ்வொன்றுந் தேனடையாய் இனிக்கக் காண்போம். காமமெனுஞ் சொல்லொலியைக் கேட்டு நெஞ்சங் கலங்கியிது கொடுநெறியாம், வேண்டா என்று பாமரரை ஏய்ப்பவரும் பாரில் உண்டு பாலுணர்வும் நூலுணர்வும் அறியார் பாவம்! தேமதுரத் தமிழ்க்குறளில் காணுங் காமம் தித்திக்குந் தேன்பாகோ செங்க ரும்போ யாமறியோம் உவமைசொல; உவமை யாக யாதுரைத்தும் பயனில்லை காமம் விஞ்சும். இல்லறத்தை *இல்அறமா நடத்தி நாளும் இடர்கண்டோன் விலங்கென்றும் பாரம் என்றும் சொல்லிவிட்டுக் காவிக்குள் புகுந்து கொண்டான்; சுவைகாணும் நெறியறியான் வாழ்ந்துங் கெட்டான்; இல்லறத்தின் குறிக்கோளைக் குறளிற் காண்போன் எவன் வெறுப்பான் இல்வாழ்வை? மேலோன் சொன்ன நல்லறத்தின் நெறிநிற்போன் இந்த இன்ப நலமொன்றே பேரின்பம் என்று சொல்வான்.
* இல்அறம் = அறம் இல்லாமை |