நெஞ்சங்கள் நிலமாகச் சிறிய செந்நா நிலத்தையுழும் ஏராகக் கருணை யோடு விஞ்சுபுகழ்க் கவியாற்றல் காளை யாக வித்தாக அறமிட்டுப் பொருளைப் பாய்ச்சி நஞ்சுமிழும் அழுக்காறு வெகுளி ஆசை நாலுவகைச் சாதியெனுங் களையெ டுத்து நஞ்செய்நிலப் பயிராக விளைத்தான் இன்பம் நானிலத்தின் உயிரெல்லாம் உய்யக் கண்டோம். ஈரடியால் மாநிலத்தார் உள்ள மெல்லாம் இனிதளந்தான் புகழ்கடந்தான் மொழிக டந்தான் ஓரடியும் நெடுமுடியும் காணா வண்ணம் உயர்ந்தோங்கும் நெடியோனை மனந்து ணிந்தே ஊரறியக் குறள்மனிதன் என்று நீங்கள் உரைத்தமைக்குக் காரணமென்? *கால்கு றைந்த ஈரடியான் குறளடியான் என்று நோக்கி இவ்வண்ணம் உரைத்தீரோ? ஆம்ஆம் உண்மை வள்ளுவர் பேரவை, சிவகங்கை 14.7.1963
*கால்குறைந்த ஈரடி = ஒன்றே முக்கால் அடி |