பக்கம் எண் :

44கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

தினவென்னுஞ் செயலடக்கி, மயல டக்கித்
       திரிபின்றி வாழ்பவர்க்குத் தாழ்வே யில்லை;
கனவென்னும் பொழுதத்துந் தீமை யில்லை;
       காலமெலா முயர்வுண்டு; நன்மை யுண்டாம்;
எனமொழியும் அடக்கமெனும் உடைமை தன்னை
       எள்ளளவும் கைக்கொள்ள நினைந்த துண்டா?

எத்துணைதான் கற்றாலும் ஒழுக்க மென்ற
       இலக்கணத்தைக் கல்லாதான் அறிவே யில்லான்
பித்தனவன், கடையனென உலகம் பேசும்;
       பின்றொடர்ந்து பழிகளெலாம் அவனைச் சேரும்;
முத்தனைய சிலசொல்லாற் குறளு ரைத்த
       மொழிப்பொருளை நமக்குடைமை யாக்கி னோமோ?
பித்தளையைப் பொன்னாகக் கருதி யிங்குப்
       பேதுற்றோம் எதையெதையோ உடைமை என்றோம்.

தீங்கொருவன் செய்தவழிச் சினந்தெ ழுந்து
       சிறுமைசெயின் அவன்காண்ப தொருநா ளின்பம்
ஆங்கவனைப் பொறுப்பானேல் உலகி லென்றும்
       அழியாத புகழுக்கே உரிய னாவன்;
தீங்குறளில் பொறையுடைமை என்று சொன்ன
       சிறப்புடைமை நமக்குடைமை யான துண்டோ?
நீங்கிடுமவ் வொருநாளை யின்பங் காண
       நினைக்கின்ற மடமைக்கே ஆளாய் நின்றோம்.

பொருளுடைமை புல்லர்க்கும் வாய்ப்ப தாகும்;
       பூமிதனில் உடைமைக்குள் உடைமை என்னும்
அருளுடைமை சான்றோர்க்கே அமைவ தாகும்;
       அணியுடைமைக் குறளிதனை ஒதக் கேட்டும்
மருளுடைமை மிகுந்தவராய்ப் பகைமை பூண்டு
       மாநிலத்துப் போர்வெறியே கொண்டு ழன்று
செருவொழிய மனமிலராய்ச் சினந்தெ ழுந்து
       சிறுமைசெய நினைந்திருந்தோம் தாழ்வே கண்டோம்.