பக்கம் எண் :

46கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

திறம்பாத பண்புநமக் குடைமை என்று
       செம்மாந்து நிற்பதற்கும் உரிமை யுண்டோ?

அல்லவற்றைச் செய்வதற்கு நாணங் கொள்வர்
       அறிவுடைய குலமக்கள் என்ற றிந்தும்
நல்லவற்றைச் செய்வதற்கே நாணு கின்றோம்
       நாணுக்கும் நமக்கும்வெகு தூர மன்றோ?
சொல்வதற்கும் நாணுகிறேன் பழிகள் செய்யத்
       தொட்டறியாத் துறையுண்டோ? ஒன்று மில்லை
செல்லவிட்ட நாணமது நம்மைக் காணின்
       சிரித்தொதுங்கித் தலைகுனிந்து நாணிச் செல்லும்.

குறள்பிறந்த திருநாட்டிற் பிறந்த மாந்தர்
       குறையுடைய வாழ்வினராய் வாழ்ந்தா ரேனும்
அருள்நிறைந்த மனத்தினராய்க் குறள்நூல் காட்டும்
       அருநெறியில் வழுவின்றி ஒழுகும் சான்றோர்
ஒருசிலர்தாம் ஆங்காங்கே வாழ்த லாலே
       உலகமினு மழியாமல் நிற்கக் கண்டோம்
தெருளறிவு தருநூலை ஓதி ஓதித்
       தெளிந்தொழுக முயன்றிடுவோம் வாரீர்! வாரீர்!

வள்ளுவர்சொல் லுடைமையெலா மவ்வ வர்க்கு
       வாழ்வளிக்குந் தனியுடைமை யாகுங் கண்டீர்!
வெள்ளமெனச் சேர்ந்துறையும் மன்ப தைக்கு
       விழவுதரு பொதுவுடைமை யாகுங் கண்டீர்
உள்ளமது குழைந்தும்மை வேண்டு கின்றேன்
       ஒப்பரிய குறள்நெறியை உடைமை யாக்கி
அள்ளுதமிழ்ப் பாமொழியை நெஞ்சிற் றேக்கி
       அளப்பரிய இன்பத்தில் திளைப்போம் வாரீர்.

திருக்குறள் விழா, செங்கோட்டை - 20.5.1967