14 மானங்காப்போம் விரிந்ததலைத் தென்னையிளங் கீற்றுட் பாய்ந்து விளையாடிச் சலசலவென் றொலிஎ ழுப்பி விரிந்தமலர்க் கொடிபடரும் மாடத் துள்ளே மெல்லென்று வருதென்றல் நீவி யின்பம் புரிந்திருக்கத் தேய்பிறைதன் ஒளியை வீசப் புந்தியினை ஒருநிலையிற் செலுத்தி நின்று சுரிந்துவிழும் அலைகடல்சூழ் உலக மாந்தர் சூழ்நிலையை மனப்போக்கை நினைந்தி ருந்தேன். தென்றலையுந் தோல்வியுறச் செய்யும் நல்லாள் திருந்தடியிற் சிலம்பொலியும் கேளா வண்ணம் மென்றளிரின் அடியெடுத்து நிலத்தில் வைத்து மெல்லெனவந் தென்னருகில் நின்று ‘நெஞ்சில் ஒன்றிவருஞ் சிந்தனைதான் யாதோ? என்றாள்; உயர்மானம் இன்றுள்ள மாந்தர் வாழ்விற் குன்றிவரும் நிலைகண்டேன்; இந்த வாழ்வு குறள்பிறந்த நாட்டினிலோ! என்று நைந்தேன். ‘மானத்தை மாந்தரிடங் காண எண்ணி வானத்தை நோக்குகின்றீர் என்ன கண்டீர்? மானத்தை நகைப்புறவே செய்து விட்ட மண்ணிலதைக் காணாத தாலோ!’ என்றாள்; தேனொத்த மொழிபுகன்றாய் ஆம்ஆம் உண்மை தேய்பிறையில் அதுகண்டேன்; களங்கம் ஒன்று பூணத்தான் மனமின்றி உடலந் தேய்ந்து பொன்றுதற்கு முயல்வதுகாண்! அதுதான் மானம். |