48 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
புகழ்ப்பேறும் பொருட்பேறுங் கருதி வஞ்சப் பொய்ம்மொழிகள் பலபேசி நடித்துக் காட்டி மிகப்பேணத் தகுமானம் விடுத்துப் பின்னர் மேதினியில் ஊனோம்பி வாழும் வாழ்க்கை உகப்பான தெனவுரைக்க ஒவ்வார் மேலோர்; உயிர்விடுத்தும் மானத்தைக் காக்கும் வாழ்வே பகுத்தாயும் அறிவுடையார் உயர்ந்த தென்பர்; பாழ்வயிற்றைக் காப்பதெனில் நாயுங் காக்கும். ஒருமானங் காப்பதுதான் முறைமை என்றால் உலகத்தில் வருமானம் போமே என்பார்; திரிமானஞ் செய்திருந்து பதவிக் காகத் தீமைஎலாம் செய்துயர்வார்; கொள்கை தன்னிற் சரியான பிடிமானம் இல்லார் ஒன்றில் தங்காமற் கிளைதோறுந் தாவித் தாவி வருவார்தம் வாழ்க்கையிலே மானம் எங்கே மறைந்துளதென் றாய்ந்திடினும் காண்ப துண்டோ? சிக்கெடுத்து நெய்தடவி மலர்கள் சூட்டிச் செய்ம்முறைகள் பலசெய்து பேணிக் காத்துத் தக்கபடி வளர்க்கின்றாய் கூந்தல் தன்னை; தலைமகளே அதுதலையின் இழிந்து விட்டால் மிக்கதொரு முயற்சியினால் வளர்த்த தென்று மீண்டுமதைப் போற்றுவையோ? சீசீ என்று பக்கலிலே எறிந்திடுவை மானந் தாழ்ந்த பதர்மனிதன் நிலையுமது போல்வ தென்றேன். ‘நெருநலொரு மணத்தைலம் வாங்கி வந்தேன் நெடுங்கூந்தல் அடர்ந்துவரும் ஆசை யாலே |