பொருண்மிகவுஞ் செலவிட்டேன் எனநி னைந்தோ புகலுகின்றீர் இவ்வண்ணம்’ எனப்பு லந்தாள்; அருள்விழியே உவமைக்குச் சொன்னே னன்றி அணுவளவும் உனைக்கருதிச் சொன்னே னல்லேன்; பொருணிறையுந் திருக்குறளிற் கண்ட சொல்லைப் புகன்றதலால் நெஞ்சறிய மற்றொன் றில்லை. என்று சொலி யருகிருந்தேன்; ‘பதவி தன்னால் எண்ணரிய செல்வத்தால் அறிவு கல்வி ஒன்றுதவ வேடமெனும் இவற்றா லெல்லாம் உயர்வெய்தி யுலகத்து மாந்தர் முன்னே குன்றனைய வாழ்வினரும் மானங் குன்றும் கொடுமைகளைச் செய்கின்றார் குறளுஞ் சொல்வார் நன்றுசெய நினைவார்போல் நடிப்புஞ் செய்வார் நாடிவரால் நலம்பெறுமோ நவில்க’ என்றாள். குன்றனைய வாழ்வினரும் மானங் குன்றின் கொடுவிலங்கே அவர்க்குநிகர் என்னல் சாலும் என்றுரைக்க நினைந்திடினோ கவரி மாவந் தெனையுவமை சொல்லற்க எனத்த டுக்கும்; ஒன்றுமயிர் நீங்கிடினும் உயிரை வேண்டா உயர்பண்பை அதுதன்பாற் கொண்ட தாலே; நன்றெனவே உயிர்விரும்பி மானம் போக்கும் நல்லவர்க்கோர் உவமைசொல ஒன்று மில்லை. தன்னிலையிற் றாழாமை வேண்டும் வேண்டும் தாழ்வுவரின் வாழாமை வேண்டும் வேண்டும் தன்னுயிரை மிகச்சிறிதா எண்ணல் வேண்டும் தகுமானம் ஒன்றனையே காத்தல் வேண்டும் |