பக்கம் எண் :

50கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

புன்னலமே காப்பதற்கு மாற்றான் பின்னே
       போயவனை வால்பிடித்து வாழல் வேண்டா
என்னுமொரு குறிக்கோளில் வாழ்ந்து நின்றால்
       இனியகுறள் தோன்றியதன் பயனைக் காண்போம்.

பொதுவாழ்விற் புகுந்திடுவோர் மான மெண்ணிப்
       புகுவாரேல் அவர்கனவு பலிப்ப தில்லை
அதுபோகத் தனிவாழ்வில் மானம் ஒன்றே
       தளராமற் சிதையாமற் காத்தல் வேண்டும்
மதுவாழும் மலர்க்குழலி நினக்கும் ஒன்று
       மறைவாக மெதுவாகச் சொல்லு கின்றேன்
பொதுவாகக் குறையாடை, மானம் வேண்டும்
       பொற்றொடியார் அணியாமை வேண்டும் என்றேன்.

வள்ளுவர் விழா. திருச்சி வானொலி நிலையம்,
24.5.1967