பக்கம் எண் :

52கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

இல்லையோ நம்பால்? ஏனவை மறந்தோம்?
இன்சுவைக் கனிகள் என்றுங் குலுங்கும்
அன்பு மணமலர் அளவிலா திலங்கும்
இன்பப் பூங்கா இல்லற வாழ்வே
என்பதை மறந்தோம் இடரினில் புகுந்தோம்;
பொருளே குறிக்கோள்! பூமியில் பிள்ளைகள்
பெறலே குறிக்கோள்! பெருவயி றாரத்
தினலே குறிக்கோள்! இவ்வணந் திரிந்தால்
அதுவா வாழ்வு? அதுவோ இன்பம்?
எதுதான் வாழ்வெனப் புரியா திருந்தோம்;
இதுதான் வாழ்வென இயம்பினன் வள்ளுவன்;
அவ்வழிச் சென்றினி அன்பினைப் பெறுவோம்
செவ்விய நன்மைகள் சேர்ந்திட முயல்வோம்
ஏழிசை யாழென இனியநம் குடும்பம்
வாழிய வாழிய வாழிய நலமே.

23.12.1967