பக்கம் எண் :

54கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

முழுகுமவன் முகம்நோக்கி நிலமாம் நல்லாள்
       முணுமுணுத்து நகைக்கின்றாள்; உழைப்பை நல்கும்
அழகனையே அவள்விரும்பி நாளும் நாளும்
       அழகெல்லாம் விரிக்கின்றாள் சிரிக்கின் றாளே.

தொழுதுண்டு பின்செல்லும் மாந்தர் தம்மைச்
       சுமக்கின்ற உலகமெனும் பெருந்தேர் செல்ல
உழுதுண்டு வாழ்பவனே ஆணி யாக
       உதவுகின்றான் எனப்புலவன் உரைத்த பின்னே
எழுதுண்ட கோலாலே எழுதிக் காட்ட
       என்னுளது? பெருமைமிக வுடையா னேனும்
அழுதுண்டு வாழ்கின்றான் உலகைக் காக்க
       அமுதுதரும் அவ்வுழவன்; முறையோ ஈது?

செய்யாறு,
17.1.1969