17 வாழ்க்கைக்குத் தலைவன் உள்ளம் நினைத்ததை ஓரா தியற்றும் பள்ளிப் பருவம், பதினா றகவை; எண்ணக் குதிரையில் ஏறித் திரிந்து மண்ணில் விண்ணின் மகிழ்ச்சியைக் கண்டு பண்ணும் கூத்தும் நுகரும் பருவம்; தவறுகள் செய்தும் தருக்குடன் அலைந்தும் கவலையே யின்றிக் களிப்புறுங் காலம்; இளமைத் துடிப்பில் இதுதான் வாழ்வென உளமதிற் கருதி ஒழுகினேன்; அந்நாள் ஓதும் பொழுதில் ஒருநூல தனுள் தீதிலா ஒருவரி தெரிதரக் கண்டேன்; ஒளிநிறை வடிவினன் ஒருவன் ஆங்கே தெளிமுகங் காட்டிச் சிரித்தனன் நோக்கி ‘இளையோய் உலகில் இயற்றுக அறம்’ என அளிமிகு மொழியால் அறைந்தனன் என்பால்; அறஞ்செய் பருவமும் அவ்வறம் இயற்றிட உறுபொருட் பெருக்கமும் உற்றே னல்லேன் எவ்வணம் நல்லறம் இயற்றிட வல்லேன்? செவ்விதின் உரைஎனச், செப்பினன் மறுமொழி: ‘மனத்துக் கண்ணுறும் மாசுகள் அகற்றின் அனைத்தறன் இதனை ஆக்குக’ என்றனன்; |