பக்கம் எண் :

58கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

உள்ளஞ் சோர்வுறின் ஓடிவந் தென்பால்
வள்ளுவன் காட்டிய வழியெலாம் விளம்பின்
ஒன்றா இரண்டா ஒரா யிரமாம்;
‘குன்றா வளத்துடன் கூர்மதி இருப்பினும்
நன்றாம் பணிதல் நாடுக இதனை;
ஒன்றுநன் றொருவர் உனக்குச் செய்ததை
என்றும் நினைத்திரு ஈதுனை உயர்த்தும்;
காக்கும் பொருள்பல காவா விடினும்
நாக்கினைக் காக்க நாளும் தவறேல்;
மறந்துங் கேடு மற்றவர் தமக்குப்
புரிந்திட நினையேல் போற்றுக நன்மை;’
எனப்பல நெறிகள் இனிதே உணர்த்தி
மனத்துட் பண்புகள் விளைத்தனன்; அவனே
இனிய வாழ்க்கைக் கேற்றதோர் தலைவன்;
எனநான் கொண்டுளேன்; இப்புவி வாழ்வோர்
அனைவர் தமக்கும் அவனே தலைவன்
அருளும் அறமும் கருதிய தலைவன்;
தேர்தலில் நில்லா நேரிய தலைவன்;
ஆர்நிகர் உள்ளார் அவற்கெனுந் தலைவன்
போட்டியிங் கில்லாப் புகலருந் தலைவன்
பாட்டால் பண்பை ஊட்டிய தலைவன்
மக்கள் நலமே மதித்திடுந் தலைவன்
மிக்குயர் அறிவால் மேம்படுந் தலைவன்
வாழிய தலைவன் வாழிய நலமே
வாழிய குறள்நூல் வாழிய இனிதே.

31.5.1969