பக்கம் எண் :

60கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

தெள்ளுதமிழ்ப் பேருடையான் தேர்ந்த புலமுடையான்
அன்றிங்கு வாழ்ந்ததனால் ஆருயிர்க்கு முப்பால்நூல்
ஒன்றிங்குத் தந்துவந்தான்; உண்மையில் இன்றுவரின்
முப்பாலைத்தொட்டு முடிக்காது விட்டிருப்பான்;
எப்பாலோ சென்றவனும் ஏங்கிப் புலம்பிடுவான்;
வஞ்சனையே வையத்தில் வாழும் நிலைகண்டு
நெஞ்சு கொதித்து நினைந்து நினைந்தழுவான்;
மக்கள் நிலைமாறி மாக்கள் நிலைக்கேகித்
தொக்கிருக்கக் கண்டு துடிதுடித் தேவிழுவான்;
சொல்லும் *உயர்திணையைச் சூழுலகிற் காணாது
வல்லதோர் *அஃறிணையாய் வாழ்வாரைக் கண்டழுவான்;
கற்றறிவு காட்டுவதில் *முற்றாக நில்லாது
சொற்றதோர் *எச்சமெனச் சூழ்வாரைக் கண்டழுவான்;
எச்சங்கள் நற்பெயரை ஏற்க முடியாமல்
அச்சங்கொள் தீவினைக்கே ஆளாகக் காண்பான்;
இலக்கணத்தார் *வேற்றுமை எட்டென்பர் இங்கோ
சொலத்தொலையா வேற்றுமை சூழ்ந்திருக்கக் கண்டிடுவான்;
பண்பு தொகைதொகையாய்ப் பாரில் பரவாமல்
*பண்புத் தொகையான பாழ்நிலையைக் கண்டிடுவான்;
உண்மைஅறம் நேர்மை உலகத்தில் தேடுங்கால்
*அன்மொழியாய்ப் போனதுகண் டாற்றா தழுதிடுவான்;
நாற்பா வகைஎல்லாம் நன்குணர்ந்த பாவலர்தம்
நூற்பாக்கள் கண்டுவக்க நுண்ணறிவன் இன்றுவரின்
வெண்பா எனும்பெயரால் விட்டுவைத்த நூலெடுத்து
*வெண்பாட்டுக் கண்டுளத்தில் வேதனைகள் கொண்டிடுவான்
நல்ல *அகவல்நூல் நாடி வருங்காலை
அல்லல் மிகுந்தோர் அகவலன்றி வேறறியான்;


*உயர்திணை, அஃறிணை, முற்று, எச்சம், வேற்றுமை, பண்புத்தொகை, அன்மொழி, வெண்பாட்டு முதலிய இலக்கணச் சொற்கள் நயம்படக் கூறப்பட்டுள்ளன.