*வஞ்சிப்பாக் காண வருவோன்றன் கண்முன்னே வஞ்சிப்பா ரன்றி வளர்பாக்கள் கண்டறியான்; பாட்டில் *கலிஎன்னும் பாவகையைத் தேடிடுவான் நாட்டில் கலியே நடமாடக் கண்டிடுவான்; இவ்வண்ணங் காணுங்கால் ஏங்கி அழுதழுது செய்வண்ணம் யாதென்று சிந்தித் தலமருவான்; கண்ணீரை மாற்றக் கடவுளுறை கோவிலுக்குள் புண்ணீர்மை மாறுமெனப் போய்ப்புகுவன்; அங்குறையும் ஆண்டவன் தாள்மலரை ஐயன் தொடக்கண்டு “தீண்டாதே தீண்டாதே தேவன் திருவடியை, எட்டி யிருந்தே இறைவனைநீ போற்றிடுக, தொட்டு வணங்குகிற தொல்லுரிமை நிற்கில்லை”; என்ற குரல்கேட்பான்; ஏங்கித் தொழுதபடி நின்ற கடவுள்முகம் நோக்கி நிலைத்திருப்பான்; என்னவிடை சொல்வான் *எழில்விடையன்? வள்ளுவற்கு முன்னர்ச் சிலையாகி *மூங்கையென நின்றிருப்பான்; வாலறிவன் மூங்கையென *வாளாமை கொண்டுமறை* நூலவற்கு மாற்றம் நுவலா திருப்பானேல் “செத்தான் இறைவனவன் செத்தே மடிந்துவிட்டான் அத்தா இறந்தனையோ? ஐயஓ” என்றழுவான்; “தெய்வஇசைப் பாட்டென்ற தேவாரத் தேனிருந்தும் செய்யதிரு வாய்மொழியாம் தித்திக்கும் பாலிருந்தும் தேன்சுவையும் பாலின் தெளிசுவையுங் காணாமல் கூன்மனத்தர் செய்த கொடுமைகளைக் கண்டேயோ? செந்தமிழ நாட்டகத்துச் சேர்ந்திருந்தும் எங்கிருந்தோ வந்தமொழி கேட்டேயோ? மாறினைநீ கல்லாக”
*அகவல், வஞ்சி, கலி முதலிய பா வகைகளும் நயம்பட நவிலப்பட்டுள்ளன. எழில் விடையன் - காளை மீதமார்ந்த சிவன், மூங்கை - ஊமை, வாளாமை - பேசாமை, மறைநூலவர்க்கு - தமிழ்மறையாகிய நூலைத் தந்த வள்ளுவர்க்கு |