பக்கம் எண் :

62கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

என்றெல்லாஞ் சொல்லி *இனைந்து மனமுருகி
நின்றன்னான் வெய்துயிர்த்து நீடு நினைந்தழுவான்;
“கூறு படுத்திடவே கூறுஞ் சமயங்கள்
நூறு வகையாம்! நுவல்வழியும் வெவ்வேறாம்!
எல்லாருங் கொண்டொழுகற் கேற்ற நெறிமறந்
தல்லா நெறிபுகுந்தே அல்லற் படுகின்றார்;
ஒன்றே குலமாக ஒன்றே இறையாக
நன்றே புகல்நெறியை நாடாமல் ஓடுகின்றார்;
ஒற்றுமைதான் இங்கே உருப்படுமா? மக்களுக்குள்
பற்றுள்ளந் தோன்றிப் பரவிடுமா? இம்மாந்தர்
நெஞ்சகத்தே மாசகற்ற நேராமல் எத்துறையும்
வஞ்சித்தே ஆகுலங்கள் வாய் விட்டொலிக்கின்றார்”
என்று மனம்நைந் தெழுந்து நடந்தகன்று
நின்று விழியால் நிலவுலகை நோக்கிடுவான்;
வாழ்கின்ற மாளிகையோ வான முகட்டளவு
ஏழ்நிலைய மாடத் தெழிலோ டுயர்ந்திருக்கும்;
உள்ளுறையும் மாந்தர் உள்ளமோ கீழ்நோக்கிப்
பள்ளம் படுகுழியில் பாய்ந்து விழுந்திருக்கும்;
உண்டு களித்திருப்போர் ஓர்புறத்து மாளிகையில்
பண்டை அரசரெனப் பஞ்சணையில் சாய்ந்திருப்பர்;
நெஞ்சுலர்ந்து வாயுலர்ந்து நிற்கும் இடமிழந்து
பஞ்சையர்கள் ஓர்புறத்தே பட்டினியில் வீழ்ந்திருப்பர்;
மஞ்சு தவழ்ந்து வரும் மாடமனை ஓர்புறத்து
விஞ்சும் எழில் தாங்கி வீறுபெற நின்றிலங்கும்;
ஓடென்றுங் காணா தொழுகுஞ் சிறுகுடில்கள்
வீடென்ற பேரால் விளங்கும் மறுபுறத்தே;
மேடென்றும் பள்ளமென்றும் மேலென்றுங் கீழென்றும்
நாடின்னுஞ் சொல்லி நடப்பதெலாங் கண்டிடுவான்;