பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்65

19
நடை பயில்வோம்

வையத்து மாந்தரெலாம் வாழும் முறை தெரிந்து
உய்யத்தான் ஓதி ஒருநூலைத் தந்தமகன்;
பேராழி சூழுலகிற் பேதைமையாம் பாழிருட்டைப்
போராடி நீக்குதற்குப் பூத்துவருஞ் செங்கதிரோன்;
உள்ளமெனும் பைங்கூழ்கள் ஓங்கித் தழைத்துவரத்
தெள்ளமுதம் பாய்ச்சிச் சிரித்துவருந் தண்ணிலவு;
பற்றிப் படர்ந்துநமைப் பாழ்செய்யும் நோய்க்குணங்கள்
முற்றத் தொலைக்க முளைத்துவரும் நன்மருந்து;
கற்றோர் மனம்பூத்துக் காய்த்துக் கனிகுலுங்க
வற்றாப் புனல்சுரந்து வாழ்வளிக்கும் பேராறு;
வெண்முத்துச் செம்பவளம் வேண்டியமட் டுங்கொடுத்து
மண்ணகத்தை வாழ்விக்கும் மாண்புயர்ந்த பேராழி;
மண்டி வருமாந்தர் மாசகற்றி நெஞ்சத்திற்
கொண்ட பிணியகற்றும் குற்றாலப் பேரருவி;
உள்ளத்தைப் பற்றி உலுக்கிவரும் வெப்பத்தை
மெள்ளத் தணிப்பதற்கு மேவிவருந் தென்றல்;
அறிவுப் பசியால் அழுதிருக்கும் நம்மைப்
பரிவுப் பெருக்கால்முப் பாலூட்டும் நற்றாய்;
அறஞ்சொல்லி ஆன்ற பொருள்சொல்லிக் காமத்
திறஞ்சொல்லிக் காட்டித் தெளிவிக்கும் பேராசான்;
ஈரா யிரத்தாண்டின் முன்னே எழுந்ததொரு
பேரா மலைநிகர்ப்போன் பேரறிஞன்; அன்னவன்தான்