பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்71

பித்தர் எனுமாறு பேதுற் றலைகின்றோம்;
பேரருள் காட்டும் பெரியன் சினனென்போம்
சீறுஞ் சினத்தைச் சிறிதேனும் விட்டோமா?
அல்லா எனஒன்றும் அப்படியே சொல்லிடுவோம்
அல்லா நெறிநடந்தே அல்லற் படுகின்றோம்;
ஏசு பெருமான் எனவுரைப்போம் மற்றவரை
ஏசு நெறியன்றி என்னபயன் கண்டுவிட்டோம்?
ஏமாற்ற என்றே இறைநெறியைச் சொல்வதன்றி
ஓர்மாற்ற மின்றில்லை உள்ளத்தை மாற்றிவிட்டோம்;
நாமிழைக்குந் தீவினையால் நல்லதோர் செம்பொருள்மேல்
*தோமிழைக்க ஐயங்கள் தோன்றிவரக் காண்கின்றோம்
இன்றுவரும் மாணாக்கர் ஆசான் இயம்புவதைக்
கொன்றுவருங் காலமிது! கொன்றோம் அவன்மொழியை,
முப்பாலாய் நல்ல முறைசொல்லும் நூலிருந்தும்
அப்பாலைக் காணாமல் அப்பாலே செல்கின்றோம்;
தாய்ப்பாலை நம்பாமல் மேய்ப்பானை நம்பிநின்
றாப்பாலுக் காக அலைகின்றோம்; நாம்பெற்ற
ஐம்பொறியுங் கேடுறலால் அந்தோஇம் மாநிலத்தில்
*செந்நெறியுங் காணாமல் *சென்னெறியுந் தோன்றாமல்
வாடி அலைகின்றோம் வாழ்வு கெடுகின்றோம்
தேடி மயங்கித் திசைதெரியா தேங்குகிறோம்;
சென்றதெலாஞ் செல்க திருமறையைத் தேர்ந்தினிமேல்
நன்றுவழி சென்றுய்வோம் நாம்.

தருமபுரம் திருமடம்
9.6.1971


*தோம் இழைக்க - குற்றம் செய்ய, செந்நெறி - செம்மையானவழி சென்னெறி - செல் + நெறி - செல்லும்வழி.