சிலைவடித்த திருவுருவில் நிலைத்து நிற்கும் சிந்தனையிற் பெரியாரை, நுழையும் நுண்மாண் புலமிகுத்த வள்ளுவரைத் தில்லிக் குள்ளே புகழ்பரவக் குடியேற்றி வைத்தோர் வாழ்க. தலைவைத்த பனியுறையும் மலையின் மீது தமிழ்மாந்தர் மறங்காட்ட நாணிற் பூட்டும் சிலைவைத்தார் அன்றிருந்தோர்; உலகுக் கெல்லாம் செந்தமிழின் அறங்காட்ட வள்ளு வற்குச் சிலைவைத்தார் இன்றிருப்போர்; உலகம் உய்யச் சிந்திக்கும் பேராசான் சிலையை நாட்டி நிலைவைத்தார் தமிழ்த்தாயின் கோவி லுக்கு; நெஞ்சத்துக் களிப்பேறி வாழ்த்து கின்றேன். |