பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்75

கூறிவிட்டுச் சென்றனர்காண் கார்கா லத்தில்
       குயிலைத்தான் வாய்திறந்து பாடச் சொன்னார்
வாரிவிட்ட இவர்திறத்தை வாழ்த்த மாட்டேன்;
       வாழ்த்துகின்றேன் பேரவையை வணங்கி நின்றே

அறமுரைத்த பெரும்புலவன் நாட்டுக் காக
       அமைத்தவழி வாய்மைவழி, வாழ்வுக் காக
மறமகற்றும் நல்லவழி, கல்லும் முள்ளும்
       மாற்றிவரும் தூயவழி, மேடு பள்ளம்
அறவெறுக்கும் நேர்மைவழி, அருளைச் சிந்தும்
       அன்புவழி, இன்பமெனும் தென்றல் வீசி
நறுமணத்தை வழங்குவழி, கான்வி லங்கு
       நடவாத அச்சமிலா வழியும் ஆகும்.

தனிமனிதன் வாழ்வுக்கு வழிகள் சொல்லும்
       சமுதாய வாழ்வுக்கும் வழிகள் சொல்லும்
இனிமைமிகு மனைவியொடு கூடி வாழும்
       இல்லறத்து மாந்தருக்கு வழிகள் சொல்லும்
கனிவுதரும் இவ்வுலக வாழ்வை நீத்துக்
       காவிக்குள் நிற்பவர்க்கும் வழிகள் சொல்லும்
தனியுடைமை பொதுவுடைமை என்றி ரண்டு
       தரப்பட்ட ஆட்சிக்கும் வழிகள் சொல்லும்

அரிவையர்க்கு வழிசொல்லும் ஆண்மை மிக்க
       ஆடவர்க்கும் வழிசொல்லும்; கல்வி கற்கும்
சிறியவர்க்கு வழிசொல்லும்; கற்றுத் தேர்ந்த
       சீரியர்க்கும் வழிசொல்லும்; வயதால் மூத்த
பெரியவர்க்கு வழிசொல்லும் இளைஞ ருக்கும்
       பின்பற்ற வழிசொல்லும்; தமிழ நாட்டுக்
குரியவர்க்கு வழிசொல்லும் உலகமாந்தர்
       உய்வதற்கும் வழிசொல்லும் குறளின் பாட்டு.