உலவலாம் இன்ப வானில் உளமெலாம் படிந்த தீமை விலகலாம் குறள்வி தைத்தால் விளையலாம் தூய வாழ்வு. மூன்றுபால் உணர்த்தும் பாட்டை மூவண்ணக் கற்கள் கொண்டு தோன்றவே பொறித்து நூலின் தோற்றம்போல் விரித்து வைத்தே ஆன்றதோர் விருப்பால் காண அணுகிடும் மாந்தர் தம்மைக் கூன்தவிர் மனத்தர் ஆக்கும் குறள்மணி மாடம் உண்டு. தமிழக முதல்வ ராகத் தாம்அமர்ந் திருந்த வேளை இமைவிழி இமையா நோக்க எழுப்பிய கோட்டத் துள்ளே அமைவுறக் கலைஞர் பேரும் அழகுறப் பொறிக்கக் கண்டோம் சமைவுறுங் கோவில் கண்டோர் சரித்திரப் புகழ்தான் என்றார். இலையிதற் குவமை என்றே ஏத்தினர் கண்ட மாந்தர் கலைமலி கோவில் கண்ட காவலன் வாழ்க என்றார் புலையுளங் கொண்ட மாந்தர் புழுங்கினர் புகழைக் கேட்டுக் கலைஞரின் பெயர்பொ றித்த கல்லினை எடுத்து விட்டார். |