பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்91

நீரெடுத் திறைத்தா லென்ன
       நிலமெலாங் கரைந்தா போகும்?
பேரெடுத் தெறிந்து விட்டால்
       பேருண்மை மறைந்தா போகும்?

பேதைமைச் செயலா? அன்றிப்
       பிள்ளைமைச் செயலா? தீயோர்
போதனைச் செயலா? அன்றிப்
       புத்தியில் செயலா? என்று
வேதனை கொண்டோம்; நாட்டில்
       வேற்றவர் ஆடு கின்றார்!
காதைகள் திரும்பும் நாளைக்
       கடிதினிற் காண்பார் இங்கே.

ஆட்சியில் இருப்போர் இந்த
       அழிசெயல் செய்து வந்தால்
மாட்சிமை என்ற சொல்லுக்
       கொருசிறு மதிப்பும் இல்லை
வீழ்ச்சியை விரைந்து பற்ற
       விதையினைத் தூவி விட்டார்
ஆட்சியின் ஆண வத்தார்
       அழிதலே வரலாற் றுண்மை.

கலைத்தொழில் தேர்ந்த நண்பன்
       கணபதி என்னும் பேரான்
மலைத்திடும் வண்ணம் கண்டான்
       வள்ளுவர் கோட்டம் ஒன்று
நிலைத்திடும் பேரும் பெற்றான்
       நெஞ்சினில் வஞ்சம் இல்லான்
கலைத்திறன் வாழ்க என்பேன்
       கனிதமிழ் நிறைந்த நெஞ்சால்