இயல் - 1 முனைப்பாலும் நினைப்பாலும் பகைமை விஞ்சி மூவகமும் நாவலமும் முரணி நிற்கும். விண்தொட்டு முகில்மணந்த மலைமு கட்டின் வெண்ணிறத்துப் பனித்திரள்கள் உருகி நீராய்ப் பண்பட்ட இசையெழுப்பி அருவி யாகிப் பாறையெலாம் முழவொலிக்கப் பாய்ந்து வீழ்ந்து மண்தொட்டுச் சென்றுநில மகளைக் கூடும்; மனமகிழப் பொன்கொழித்து வளங்கள் காட்டும்; தண்ணிட்டு லிரைந்துசெலும் புனலா றென்னும் தனிப்பெயரைத் தாங்குமது வையங் காக்கும்.1 காக்கின்ற புனலாற்றின் தென்பு றத்தே கடிமதில்சூழ் மூவகமென் றொருபேர் தாங்கும் தேக்குபுகழ்த் திருநாடுவிளங்கித் தோன்றும்; திசையெட்டும் அந்நாட்டை வணங்கி நிற்கும்; பூக்கின்ற மலர்தோய்ந்து தென்றல் வீசப் பொழிநறவந் திரண்டோடும் பொழில்கள் சூழும்; தேக்குமணி மாளிகைகள் நிவந்து நிற்கும் தெருவனைத்தும் நீண்டகன்றே எழிலைக் கூட்டும்.2 கலகலவென் றொலித்துமரம் தலைய சைக்கக் காற்றுலவுங் கனிச்சோலை சூழும் நாடு; சலசலவென் றார்த்தருவி இறங்கும் சாரல் சந்தனமும் அகில்தேக்கும் காட்டும் நாடு;
தண்ணிட்டு - குளிர்ந்து, நறவம் - தேன். நிவந்து - உயர்ந்து. கடிமதில் - காவல் பெருந்திய மதில். |