262 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
நிலமுழுதும் செந்நெல்லும் செங்க ரும்பும் நீள்கமுகு வாழையொடு செழிக்கும் நாடு; பலவளமும் கெழுமிநலம் ஓங்கும் இந்தப் பழநாட்டை ஆண்டிருந்தான் மதலைக் கோமான்.3 வளம்பொலிந்து நிலங்கொழிக்கச் செய்யும் ஆற்றின் வடபுலத்தே நாவலநா டென்று சான்றோர் விளம்புகின்ற பேர்படைத்த பெருநா டொன்று விளக்கமுறு தொல்புகழாற் சிறப்புற் றோங்கும்; களம்புகுந்து திறங்காட்டி வாகை சூடிக் களிக்கின்ற தொகைமறவர் சூழும் நாட்டில் இளம்பருவப் பெருங்கனகன் செங்கோ லோச்சி இணையில்லாச் சூழ்ச்சியினால் மேன்மை பெற்றான்.4 இனத்தாலும் மனத்தாலும் பண்பாட் டாலும் இருவேறு நெறியினவாய் இயங்க லானும், தனத்தாலுங் குணத்தாலும் வேறு பட்டுத் தனித்தனியே ஆட்சிமுறை நடத்த லானும், முனைப்பாலும் நினைப்பாலும் பகைமை விஞ்சி முரண்பட்டுப் பலகாலும் சமரே வேண்டும் வினைப்பாலிற் கொலைப்பாலில் மூழ்கி மூழ்கி விளம்பியஅவ் விருநாடும் மகிழ்ந்து நிற்கும்.5 படைத்தலைமை ஏற்றுள்ளோர் தனித்தி றத்தால் பயிற்சிமிகு போர்த்திறத்தால் வெற்றி தோல்வி படைத்திடுதல் இருபுறத்தும் மாறி மாறிப் பகலிரவு சுழல்வதுபோல் இங்கு மங்கும் அடிக்கடிசென் றலமந்து திரியும் மீளும்; ஆதலினால் ஒருநாட்டில் ஏற்றங் காணும்; கிடைத்ததுவும் மறுநாளில் மாற்றங் காணும்; கீழ்மேலாய் மேல்கீழாய்ச் சுழலும் நாடே.6
கெழுமி -பொருந்தி. சமர் - போர் அலமந்து - சுழன்று. |