இயல் - 2 முழுவலியன் மாவேழன் என்னும் வீரன் மூவகத்தின் படைத்தலைமை பூண்டு நின்றான். அக்காலை மூவகத்தின் படைந டாத்தும் ஆணழகன் பலகளிற்றின் வலிமை மிக்கான்; எக்காலும் போர்க்களமே இருப்பாக் கொண்டான் ஏறனையான் மாவேழன் எனும்பேர் பூண்டான்; மிக்காரும் ஒப்பாரும் காணாச் செம்மல் மேவலரை நடுக்குறுத்தும் இமையா நோக்கன்; புக்காரும் வெலற்கரியன்; அவன்பேர் கேட்டால் பூவேந்தர் நடுநடுங்கிப் பதுங்கி நிற்பர்.7 மூவகமே அவன்வணங்கும் அன்னை யாகும்; முதல்மகனாம் மன்னவனே தந்தை யாவன்; சேவகரே மனம்விழைந்த சுற்ற மாவர்; சிரிப்பொளிரும் இடைமருவும் செவ்வாய் வாளின் நாவகமே காதலியின் இதழ்க ளாகும்; நள்ளார்தம் கூர்வாளால் முகத்தும் மார்பும் பாவியமேல் விழுப்புண்ணே முத்த மாகும்; பகைவருடல் நிறைகளமே மெத்தை யாகும்.8 கூர்வேலும் வாய்வாளும் பகையைத் தாக்கிக் குவிக்கின்ற உடலங்கள் சிந்தும் செந்நீர் பார்மேவி ஒன்றாகி ஓடும் ஆற்றின் பரப்பதுவே அவன்குதித்து நீந்தும் வெள்ளம்; ஏர்போலும் ஒருகருவி இடித்துத் தாக்கி எழுகின்ற கூக்குரலே யாழின் பாட்டு; சேர்காலை இருவாளும் எழுப்பும் ஓசை செவிக்கினிய முழவோசை அவனுக் காகும்.9
மேவலர் - பகைவர்.புக்குஆரும் - யாரும் புகுந்து. ஒளிரும் - விளங்குகின்ற நாஅகம் - விளிம்பு. நள்ளார் - பகைவர். பாவிய - படர்ந்துள்ள. |