இயல் - 3 மூவகத்தின் வலிமைமிகப் பொலியக் கண்டு நாவலத்துப் பெருங்கனகன் நாணி நின்றான். மூவகத்தின் பெயரோங்கி வலிவும் ஓங்கி முன்னிற்கும் பகையின்றித் தலைமை தாங்கிப் பூவகத்துப் பொலியுமதன் பெருமை கண்டு புழுங்கிமனம் வெதும்பிஅழுக் காறு கொண்ட நாவலத்துப் பெருங்கனகன் நாண முற்றான்; நாடோறும் அந்நினைவால் வாட லுற்றான்; நோவகத்துப் பெருகிவரப் பகைவர் நாட்டை நுண்மதியால் வெல்லுதற்கு நினைத்தான் கேட்டை.11 ‘தோள்வலிமைப் படைசெலுத்தும் தலைவன் வேழன் துணையிருக்க மூவகத்து மதலைக் கோவை ஆள்வலிமை மிக்கிருந்தும் போரில் வெல்லல் அரிதாகும்; மன்னனுக்குத் துணைநிற் பானைச் சூழ்மதியாற் பிரித்தொதுக்கல் வேண்டும்; இன்றேல் தோன்றலவன் உயிர்தானே பிரிதல் வேண்டும்; நாள்வரு’மென் றுண்ணினைந்து வேந்த னோடு நட்புரிமை பெருங்கனகன் பூண்டு நின்றான்.12
பூ - உலகம் நோவு - வருத்தம் உண்ணினைந்து - உன்நினைந்து. |