பக்கம் எண் :

வீரகாவியம்289

இயல் - 18

இவ்வுருவத் தெழிலாள்யார் என்றான் வேழன்
இளவரசி காணென்றாள் வந்த தோழி.

ஓவியத்தில் உயிர்வைத்த உரவோன் தன்முன்
      ஒருதெரிவை வந்தங்கு வணங்கி நின்றாள்;
‘காவியத்தின் தலைவிஎனத் தோற்றம் நல்கிக்
      கண்கவரிவ் வோவத்தாள் யாவள்’ என்றான்;
‘நீவியக்க நிற்குமிவள் எங்கள் மன்னன்
      நேயமகள், நானவட்குத் தோழி, இந்தக்
கோவிலுக்குள் கோதையிவள் அழகுத் தெய்வம்,
      குலமகளாம் இவளனையார் யாண்டும் இல்லை.!’63

என்றமொழி செவிப்படலும் நெஞ்சின் மீறி
      எக்களித்து வருங்களிப்பால் அவளை நோக்கி,
‘இன்றுனது கன்னல்மொழி கேட்டு நெஞ்சம்
      எல்லையின்றிப் பூரிக்கக் காணு கின்றேன்;
நின்றனுடை இளவரசி எழிலுக் கெங்கும்
      நிகரிலையோ? ஆரணங்கோ? அடவோ விந்தை!
மன்றலினுங் கொண்டிலளோ? பருவம் யாதோ?
      மாதவட்குப் பெயர்யாதோ? மொழிவாய் தோழி.’64

வெவ்வலியன் இவ்வண்ணங் கனிந்தி ரங்கி
      வினவுதலும், தான்விழைந்து வந்த எண்ணம்
செவ்வையுடன் எளிதில்நிறை வேறும் என்று
      சிந்தித்து விடைபகர்வாள், ‘மூரல் ஊறுங்


கன்னல் - கரும்பு, மன்றல் - திருமணம்