பக்கம் எண் :

வீரகாவியம்301

இயல் - 23

பொய்கைக் கரைதனிலே-மாலைப்
பொழுது வருகையிலே-வேழன்
செய்கை எலாமுணர்ந்தே - சென்று
தேர்ந்திடு கென்றுரைத்தாள்.

‘உயிரனையாய்! எனைக்கவர்ந்த காத லற்கண்
      டுரையாட வேண்டுமென உள்ளம் சற்றே
மயலடையா நின்றதடி; நாணம் வந்து
      மறுத்துரைத்துங் கேட்கவிலை நானென் செய்வேன்!
கயல்விழியோ உள்ளத்தை முந்தும் போலும்
      கண்டன்றித் துயிலில்லை என்று நிற்கும்;
செயலறியேன் எதைச்சொல்வேன் எதைத்த டுப்பேன்
      செந்நெறியொன் றுரைப்பதுநின் கடனே’ என்றாள்.90

பொறுமையுடன் உரையனைத்துங் கேட்ட தோழி
      புன்முறுவல் செய்துசில மொழிவாள், ‘அன்னாய்!
நறுமலரின் மணமாலை சூடும் நுங்கள்
      நடுவினில்யான் ஊசலென ஆடு கின்றேன்;
மறுபகலின் கதிரவன்போய் மறையும் வேளை
      மலர்வனத்து வாவியின்பால் வேழன் தன்னை
வருகவெனச் சொல்லிவந்தேன்; ஆங்கு நின்கை
      வரிசையெலாம் காட்டுதி’ என் றகன்று சென்றாள்.91


மயல் - மயக்கம், வாவி - பொய்கை