302 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 24 மாலைப் பொழுதின் வருகை நோக்கி ஏனைப் பொழுதை இகழ்ந்தனள் வேல்விழி. ‘கடையாமம் வருமுன்பே என்பொ ருட்டால் கதிர்காட்டி விடிந்துவிடிற் குறைந்தா போகும்! படையாகத் தென்றலுடன் வாடை வந்து படுத்துவதேன்? மெல்லியலார்க் கிரங்கும் நெஞ்சம் கிடையாதோ இக்கொடிய பாவி கட்கு? கேளின்றித் தனித்துழலும் ஒருத்தி யின்பால் இடையறவே ஒருசிறிதும் இல்லை யாக இடர்தரின்யான் என்செய்வல்?’ என்று ழன்றாள்.92 ‘கொடுமிரவுக் கெத்துணைதான் வலிய நெஞ்சம்; கொல்வதெனக் கொண்டதுவோ கொடிய வஞ்சம்; விடிவதற்கு மனமின்றி நிலைத்து நிற்கும்; வெண்ணிலவின் துணைகொண்டு கனலைக் கக்கும்; சுடுகதிரோற் கென்னகுறை செய்து விட்டேன்! துங்கமுகங் காட்டாமல் தூங்கு கின்றான்! கடுகிவரும் நினைவிலனோ? கருணை யில்லான் கடமையினை மறந்தனனோ? வெய்யோன்’என்றாள். 93 புகழுரையும் இகழுரையும் உலக மாந்தர் புகல்வனதாம் பொருளுரையோ மேல வர்க்கு? தகவுடையர் அவ்வெல்லாம் மனத்துட் கொள்ளார் தம்பணியைக் காலத்தில் ஆற்றிச் செல்வர்; பகலவனும் வேல்விழியாள் நொந்து ரைத்த பழிமொழிக்குச் செவிகொடுத்தல் இலனாய்ச் சேந்து தகதகவென் றொளிர்ந்தெழுந்து கடமை யாற்றத் தங்கமயம் ஆக்குகிறான் கிழக்கு வானை.94
கேள் - துணைவன், வெய்யோன் - கதிரவன் கொடியவன், சேந்து - சிவந்து, |