வான்வெளியிற் செந்நிறத்தைப் பகலோன் பூசி வையத்தில் ஒளிபரப்பத் திகழ்ந்து வந்தான்; தான்விழையும் காதலனும் தனது வாழ்வைத் தங்கமய மாக்கிஒளி யூட்டும் என்ற தேன்வழியும் நினைவதனுள் மூழ்கி மூழ்கித் திருமகளும் பஞ்சணைவிட் டகன்று போந்து, மான்வளையும் தோட்டத்துப் பொய்கை யாடி மலர்சூடி விளையாடி மகிழ்ந்து வந்தாள்.95 ‘காலைஎனும் பொழுதகன்று போன பின்னர்க் கடும்பகலும் நெடிதகன்ற பின்ன ரன்றோ மாலைஎனும் பொழுதுவரும்! இவ்வி ரண்டும் மனமிரங்கித் தொலையாவே! நின்றி ருக்க வேலைஒன்றும் இல்லெனினும் மாறி மாறி வினையியற்ற வல்லனபோல் நிலைத்து நிற்கும்; மாலையுளங் கொண்டமையால் கலங்கும் மங்கை மனம்வெம்பிப் பொழுதெல்லாம் வைது நின்றாள்.96
மாலை - மயக்கத்தை |