இயல் - 27 போதலர் நறுமணப் பொய்கைக் கரையில் காதலர் நெஞ்சம் கலந்து மகிழ்ந்தன. நாணத்தால் மிகச்சிவந்து தோன்றும் கன்னம்; நகைதவழ்ந்து விளையாடி இதழ்கள் மின்னும்; காணத்தான் மீனெனக்கண் பிறழ்ந்து பாயும்; காளையவன் நோக்குவதால் மருண்டு சாயும்; காணத்தால் இயல்வளைகள் விளங்கும் செங்கை; கச்சுக்குள் அடங்காமல் அழுங்கும் கொங்கை; பாணத்தால் வடித்தெடுத்த விழியின் ஓரம் பாய்ந்துழல்வோன் இவ்வனைத்துங் கண்டான் வீரன்.104 ‘நாளொன்றில் சிலைவடிக்கும் ஆற்றல் மிக்கோன் நனிவிழைந்து திங்கள்பல சிந்தித் தாய்ந்து, தாளென்றும் இடையென்றும் மார்பம் என்றும் தன்னைநிகர் முகமென்றும் விழிகள் என்றும் தோளென்றும் ஒவ்வொன்றும் பலநா ளாகத் தொன்முறையில் வழுவாமல் படைத்துத் தந்த வாள்வென்ற விழியழகுச் சிலையே! நின்றன் வாய்மலர ஏன்சிரித்தாய்? என்றான் வேழன்.105 ‘ஏன்சிரித்தாய் எழிற்சிலையே என்னை நோக்கி’ எனவினவும் வீரனுக்கு நின்ற பாவை தேன்வடித்த மொழியொன்றும் புகன்றா ளல்லள்; திருந்தடியால் ஈரடிகள் பெயர்ந்து சென்றாள்; ‘நான்விடுத்த சொல்லுக்கு விடையே யில்லை நங்கையுனைச் சிலையென்று விளித்த தாலோ? மான்கொடுத்த மருட்பார்வை பெற்ற வட்கு மனமிலையோ மொழியிலையோ வாய்ம லர்த்த?’106
காணம் - பொன் |