308 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
என்றுரைத்துப் பின்தொடர்வோன் அவள்செங் கையில் இலங்குமலர்த் தாமரையை நோக்கு வான்போல் ‘ஒன்றிநிற்கும் அவ்விரண்டு மொட்டும் வேண்டி உனையிரப்பன் மகிழ்ந்தளிக்க வல்லாய் கொல்லோ’ என்றவற்கு மொட்டிரண்டும் ஈய வந்தாள்; ‘ஈதன்றே என்னுளத்து வேட்கை! என்னுள் நின்றிருக்கும் மலரேனும் தருவாய்’ என்றான்; நேரிழையாள் மலரொன்று கொடுக்க வந்தாள்.107 ‘சேயிழையுன் கைம்மலரை விழைந்தே னல்லேன் செங்கயல்கள் பிறழ்மலரே வேண்டு கின்றேன்; ஈயிதனை இல்லைஎனின் செம்மை தோயும் இதழிரண்டு தந்தாலும் போதும்’என்றான்; வேயிணையும் தோளியிதழ் கொய்தா ளாக ‘விடுவிடுஅவ் விதழ்தன்னைக் கொய்ய வேண்டா சேயிதழில் வழிதேனே வேண்டு’ மென்றான்; சிற்றிடையாள் மொழிக்குறிப்பைப் புரிந்து கொண்டாள். 108 ‘பித்தரெனக் கலங்கிமனம் மாறி மாறிப் பேசுவதேன்? நகைமொழியோ? குறும்புச் சொல்லோ? நத்துவதை உரைக்காமல் தடுமாற் றத்தால் நடுங்குவதேன்? பேதையர்பால் வீரர் காட்டும் வித்தையிதோ வேண்டுவதை உறுதி செய்து விளம்புதியேல் தடையில்லை தருதற்’ கென்றாள்; புத்தமுத மொழியிதனைச் செவியிற் கேட்டுப் பூரித்தான் அம்மொழியால் மயங்கி விட்டான்.109 ‘பித்தத்தின் வேகந்தான் பேசு கின்றேன்; பேதையுன தெழிலுருவைக் கண்ட பின்பே சித்தத்தின் நிலைகலங்கிச் செயல்க லங்கித் தெரிவையுனை நினைந்திரங்கி மயங்கி நின்றேன்; முத்தமிழின் சுவையனைத்தும் நின்வாய்ச் சொல்லில் முகிழ்த்துவரக் காணுவதால் தெளிவுங் கொண்டேன்; நத்துவதிப் பூங்கொடியே வேறொன் றில்லை நல்குதியேல் வானுலகும் வேண்டேன்’ என்றான்.110
வேய் - மூங்கில். சேயிதழ் - சிவந்த இதழ் 107, 108 - இருபாடல்களும் காதற் குறிப்பை நயம்பட உரைக்கின்றன. நத்துவது - விரும்புவது |