பக்கம் எண் :

வீரகாவியம்309

‘ஈவாருங் கொள்வாரும் இங்கே யில்லை
      உரிமைதனைக் கொள்வற்கோர் தடையு மில்லை;
பூவாருங் கொடிக்குரியை நீயே என்று
      பூண்டுள்ளேன் ஓருறுதி; கண்ட ஞான்றே
நீவேறு நான்வேறென் றெண்ண வில்லை!
      நீங்கியது நானெனதென் றெண்ண மன்றே
கூவாத குயிலொன்று கூவக் கண்டேன்
      குழைவாக மனமின்று குளிரக் கண்டேன்.111

நாளுக்கு நாளுன்னை நினைந்தி ரங்கி
      நான்மெலிந்து வாழ்ந்திருந்தேன்; வாடும் என்றன்
தோளுக்குத் தோள்கொடுக்க வந்து நின்றாய்!
      துணைவிஎன உரியமணங் கொள்க’ என்றாள்;
‘வாளுக்கும் வேலுக்கும் தோற்ற தில்லை
      வட்கார்தம் வில்லுக்குந் தோற்ற தில்லை
நீளக்கண் வேலுக்குத் தோற்று விட்டேன்
      நீயுரைத்த சொல்லுக்குந் தோற்றேன்’என்றான்.112

‘வேல்விழியென் றுனக்கிட்ட பெயர்பொ ருந்தும்
      வெலற்கரிய எனைவென்ற கார ணத்தால்;
சேல்விழிநின் துணையின்றி உலக மில்லை
      செந்தமிழே நீயின்றி வாழ்வே யில்லை;
நூல்புரைமெல் லிடையணங்கே எனக்கு நின்னை
      நுந்தைதர உடன்படுமோ? விழையும் எற்குப்
பால்வழியும் மொழிபுகலும் நின்னை என்பால்
      பரிந்தளித்தால் அவனைஎன்வாய் வாழ்த்தி நிற்கும்.113

மாவேழன் எவர்பாலும் கெஞ்சி நின்று
      மனம்விட்டுப் பொருளொன்று கேட்ட தில்லை
பூவேறும் தாழ்குழலி! நின்ம ணத்தின்
      பொருட்டாக நுந்தையின்பால் இரந்து நிற்பேன்;
கோவேலன் மறுத்துரைப்பின் போரே மூளும்;
      குமுறிஎழும் வீரத்தால் மணமே சூழும்;
நாவீறு வஞ்சினத்து மொழியாக் கொள்க!
      நாளைக்கு முடிவொன்று காண்பேன்’ என்றான்.114


பூஆரும் - பூநிறைந்த, ஞான்று - பொழுது, வட்கார் - பகைவர்,