பக்கம் எண் :

வீரகாவியம்317

கொற்றவன்முன் பற்பலவும் விதந்து தோழி
      கூர்மதியால் உரைத்தவெலாம் கேட்டி ருந்தோன்
‘கற்றறியும் சான்றோர்தம் அறிவா னாய்ந்து
      கழறுதல்போல் ஏதேதோ மொழிந்து நின்றாய்;
உற்றவுன துளம்புகல மறந்தாய் போலும்
      உண்மைசொலத் தயங்குவதேன்? நோக்க மென்ன?
சுற்றிவளைத் துரைப்பதினி வேண்டா என்பால்
      துணிந்ததனை மொழிந்திடுநீ அஞ்சேல்’ என்றான்.128

‘அருள்பொழியும் விழியுடையாய்! பருவம் வந்த
      அரிவையர்தம் வாழ்வுக்குத் துணையைத் தேடி
மருளுறுவ தியல்பன்றோ; மங்கை யர்க்கு
      மணநாளே திருநாளாம்; அந்நன் னாளைத்
தருவதுநின் கடனாகும்; அதனை வேண்டித்
      தண்குடையோய் நின்னிடம்யான் வந்தேன்’என்றாள்;
‘சுருள்குழலி! நீவிழையும் ஒருவ னுக்கே
      துணையாவாய் எனமகிழ்ந்து சொன்னான் மன்னன்.129

தந்தையினும் பரிவுடையோய்! மாலை சூடத்
      தவிக்குநிலை எனக்கில்லை; குலம்த ழைக்க
வந்தவளை வேல்விழியை அவள்வி ழைந்த
      வாள்வீரன் ஒருவனுக்கு மணமு டிக்கச்
சிந்தையினில் நான்விழைந்தே வேண்டி நின்றேன்;
      சிறியவளென் வேண்டுதலைச் செவியில் ஏற்று
நுந்தைகுலம் தழைத்துயர்ந்து வளர்வான் வேண்டி
      நுண்ணிடைக்குத் திருமணநாள் குறிக்க’ என்றாள்.130

‘பொன்மகளே! ஆண்மகவு பெற்றே னல்லேன்
      பொற்பதுமை என்னஒரு பெண்ணைப் பெற்றேன்;
என்மகட்கு மணமுடித்தால் நெடுநாள் நெஞ்சில்
      இருந்துறுத்தும் கலிதீர்க்க அவள்வ யிற்றில்
நன்மகவு பலபிறக்கும் என்றி ருந்தேன்;
      நனவனைத்தும் பகற்கனவாச் செய்து விட்டாள்;
மன்னிலத்து மன்னர்பலர் வேண்டி வந்தும்
      மணங்கொள்ள மறுத்தனளே’ என்றான் வேந்தன்131


எறிந்தால் - வீசினால், கலி - துன்பம்.