320 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 33 சீறிய மன்னன் சினத்தீ யதனை ஆறிடச் செய்தனள் அறிவுடைத் தோழி. அஞ்சித்தன் மொழிபுகல்வாள் அருள்பொ ழிந்த அரசன்றன் முகக்குறிப்பை நோக்கி நோக்கி, ‘வஞ்சிக்குத் தாயில்லாக் குறையே தோன்றா வண்ணமிது நாள்வரையும் வளர்த்த நீயோ வெஞ்சினத்து மொழிபுகன்றாய்! அவள்தன் வாழ்வை வீணாக்க விழைகின்றாய்! செற்றம் ஒன்றே நெஞ்சகத்துப் புகவிடுவோர் நீதி காணார்: நேர்மைக்கும் இடமளியார்; பகையே கொள்வர்.137 உயிராக ஒருவனைத்தன் மனத்தி னுள்ளே உறவாக மதித்திருக்கும் ஒருத்தி யின்பால் அயலானை மணக்கவென எடுத்து ரைத்தால் அவளுடல்தான் மணமேடை வந்து சேரும்; இயமாரும் மணமுரசம் ஆர்த்தல் கேளோம்; இரங்கலொலி ஒன்றன்றி எதுவும் கேளோம்; அயில்வேலோய்! தண்ணளியும் கொண்டுள் ளாய்நீ! ஆய்ந்தொன்று மேற்கோடல் சால்பாம்’ என்றாள்.138 ‘காதலெனின் ஆணைக்குக் கட்டுப் பட்டுக் கருகிவிடும் பொருளன்றாம்; எதிர்த்து வந்து தீததனை நெருங்குமெனில் தளிர்த்து நிற்கும் தெய்வீகத் தன்மையது வாய்ந்த தென்றே ஓதலிலே வல்லவர்கள் உரைப்பர்; அந்த உண்மையினை நீயுணர மறுத்து நிற்பின் சாதலிலே போய்முடியும்; குலம கட்குச் சாக்காடு தரநினைந்தால் நின்பா’ டென்றாள்.139
இயம் - வாத்தியம். அயில்- கூரிய. தண்ணளி - கருணை. |