இசைந்தானவ் வெலற்கரிய வீரன் என்ற இனியமொழி கேட்டளவில் அமிழ்தம் ஆர மிசைந்தான்போல் மகிழ்ந்தானவ் வயந்தர் வேந்தன்; மீளியவன் இசைவுபெற முயன்றார் யாரோ? ஒசிந்தொசிந்து நடைபயிலும் வேல்வி ழிக்கும் ஒள்வேலான் தனக்குமிடை நின்று கூத்து நசைந்தவணம் நடத்தியவள் நீதான் என்று நன்குணர்ந்தேன் நின்மொழியால்’ என்றான் மன்னன்.149 ‘வேல்விழியின் தன்மனமும் இமையா வீரன் வேழன்றன் மனமுமொரு நிலையில் நின்று நூல்வழியே கோத்தனபோல் இணைந்த வென்றால் நூல்வல்லார் ஊழெனவே நுவல்வர்; ஆனால் கோல்வழுவாய்! பழிஎன்மேற் சுமத்து கின்றாய்; கூர்ந்துணர்ந்து நோக்குங்கால் பருவக் கூத்தின் மேல்விளைவே ஈதன்றி வேறொன் றில்லை; மீறியவர் இயற்கையினை யாரே?’ என்றாள்.150 ‘அளப்பரிய நூல்பலவும் கற்றா ரேனும் அறிவொன்றும் அறியாத மற்றா ரேனும் களப்பலிகள் பலகொடுத்த வலிய ரேனும் கனவகத்தும் போர்காணா மெலிய ரேனும் உளப்படுத்தி உலகியலிற் சிறந்தா ரேனும் உறவறுத்துப் பற்றனைத்தும் துறந்தா ரேனும் விளக்கரிய காதலெனும் கூத்துள் நின்று விளையாடா மாந்தரெங்கும் இல்லை’ என்றாள்.151 தோழியுரை கேட்டரசன் நகைத்து நின்று ‘துடியிடையாள் மணமுடிக்க முயன்ற உன்னை வாழியென வாழ்த்துகின்றேன்; நாளை யந்த மாவேழன் தனைக்கூடி அளவ ளாவி, ஏழிசையின் இயமுழங்கச் சான்றோர் வாழ்த்த இளவரசி மணமாலை சூடும் நல்ல நாழிகையும் மங்கலநன் னாளும் ஆய்ந்து நகருக்கு முரசறைந்து சொல்வோம்’ என்றான்.152
மிசைதல் - உண்ணல். மீளி - வீரன், ஒசிந்து - வளைந்து நசைந்தவணம் - விரும்பியவண்ணம். |