பக்கம் எண் :

326கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 36

மன்னவன் மொழியெலாம் வந்தவள் உரைத்திடக்
கன்னலின் மொழியாள் களிப்பில் மூழ்கினள்.

விடைபெற்று நீங்குமவள் துள்ளிச் சென்று
      வேல்விழிக்கு நிகழ்ந்தவெலாம் விளக்கி நின்றாள்;
தடையுற்று விடுமோதன் காதல் என்று
      தவித்திருந்தோள் நற்செய்தி கேட்டு நெஞ்சில்
உடைபட்ட மடைபோல உவகை பொங்கி
      உடலெல்லாம் பாய்வதுபோல் உணர்ச்சி கொண்டாள்;
இடைமட்டும் மெலிந்திருக்க எழிலைத் தாங்கும்
      ஏனையுறுப் பத்தனையும் விம்மிற் றம்மா!153

தான்விழைந்த மணமகனே கிடைத்து விட்டான்;
      தனைப்பெற்றோன் மறுப்பொன்றும் உரைக்க வில்லை;
மான்விழைந்த பார்வையினாள் மனம்போல் வாழ்வு
      வாய்த்தமையாற் பூரிப்புக் கொண்டு நின்றாள்;
மீன்வளைந்து விளையாடும் குளிர்த டத்துள்
      மேவுமெழிற் றாமரைபோல் மலர்ந்தி ருந்தாள்;
தேன்விளைந்த காதலிலே வெற்றி கண்டால்
      தெரிவையர்க்கு மேலுமொரு பேறும் உண்டோ?154