இயல் - 37 ஆயிழையின் நெஞ்சமெலாம் மகிழ்வு பொங்க ஞாயிறெனும் செங்கதிரோன் தோன்றி வந்தான். எஞ்சிடுமப் பகற்பொழுது நீங்கிச் செல்ல இடையிலொரு கங்குலெனும் நெடிய போழ்து விஞ்சுமெழில் கொண்டவட்குப் பகையாய் வந்து விடிவதற்கு மறந்ததுபோல் நின்ற தங்கே! ‘நஞ்சனைய இவ்விரவு முன்ன ரெல்லாம் நாடோறும் விரைந்துசெலும் இன்று மட்டும் வஞ்சியெனை வாட்டுதற்கோ நிலைத்த’ தென்றாள் வாள்வீரன் மணச்செய்தி நோக்கி நின்றாள்.155 ஆயிழையின் மனத்தகத்தே அடக்கி வைத்த ஆர்வமெலாம் திரண்டுருண்டு வடிவு கொண்டு மாயிருநீர்க் கடற்பரப்பில் உருவு காட்டி வருவதுபோற் செங்கதிரோன் கீழை வானில் ஞாயிறென முகங்காட்டித் தோன்றி வந்தான்; நங்கையவள் உள்ளமெலாம் ஒளிபெற் றோங்கிப் பாயுவகை மீதுரத் தளிர்த்து நின்றாள் பகலவற்கு வாயார நன்றி சொன்னாள்.156
மாயிரு - கரிய பெரிய. |