இயல் - 39 முரசம் ஆர்த்தது முழவொலி கேட்டது அரசன் மகளை அடைந்தனன் வேழன். மணமகளாம் வேல்விழியை அணுகி நின்று மன்னவனவ் வுறுதிமொழி கூறக் கேட்டுக் குணமகளாம் அன்னவளும் இசைந்தா ளாகக் கொற்றவனும் மகிழ்ந்தெழுந்து சான்றோர்ச் சார்ந்து மணவறையை அமைப்பதற்கு நாள்கு றித்தான்; மாநகரம் முழுமைக்கும் முரச றைந்து தணவரிய மகிழ்வூட்டும் செய்தி சொல்லத் தனைச்சூழும் அமைச்சர்க்கும் ஆணை யிட்டான்.159 மாந்தரெலாம் மணமுரசங் கேட்டுத் தங்கள் மக்கள்திரு மணம்போல மகிழ்வு கொண்டார்; வேந்தனுறை அரண்மனையும் மாடஞ் சேரும் வீதிகளும் தாமுறையும் இல்லம் யாவும் ஏந்துமெழில் கொண்டிலங்கத் தோர ணங்கள் எடுத்தார்பூம் பந்தர்பல படைத்தார்; வண்ணச் சாந்துவகை மதிற்பூசி நகர மெல்லாம் சாற்றரிய ஒப்பனையாற் கோலஞ் செய்தார்,160 தெருவெல்லாம் புதுமணலைப் பரப்பிக் கோலஞ் செய்திறத்தாற் புதுநகரம் படைத்து விட்டார்; செருவெல்லாம் வென்றவனைக் கணவ னாகச் சேயிழையாள் மணமாலை சூட்டும் நன்னாள் வருவதனாற் சிறைக்கதவம் திறக்க என்று வாள்வேந்தன் ஆணையிட்டான்; வாரி வாரித் தருபொருளால் கற்றோரும் மற்றோர் யாரும் தனிமகிழ்ச்சி கொளச்செய்தான் தானுங் கொண்டான்.161 |