பக்கம் எண் :

330கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

குறித்தமண நாள்வரலும் கொற்ற வன்றன்
      கோயிலெலாம் தெருவெல்லாம் மக்கள் கூடிச்
சிரித்தமுகங் கொண்டங்கு நிறைந்து நின்றார்
      சேர்ந்தவருள் மன்னரென்றும் மக்கள் என்றும்
பிரித்தறிய முடியாமற் கலந்து நின்றார்;
      பெரும்புலவர் தம்வாயால் வாழ்த்தி நின்றார்;
விரித்தஇதழ் மலர்மாலை சூட்டி வேழன்
      வேல்விழியைக் கைப்பிடித்தான் துணையாக்கொண்டான்162

மாமலையிற் பிறந்தஒரு மணியும், பூமி
      மண்ணுக்குள் புதைந்திருந்த பொன்னும் ஒன்றாய்த்
தாமருவி அணிகலனாய் விளங்கல் போலத்
      தனிமகளாம் வேல்விழியும் வேழன் றானும்
பூமருவு மணமாலை பூண்டு நெஞ்சுட்
      புகுந்திருவர் ஒருவரென ஆகி நின்றார்;
தாமரையும் மணமுமென இல்ல றத்தில்
      தாமிணைந்தோர் அணிகலனாய் விளங்கி நின்றார்163