இயல் - 40 திருமண மாகிய இருவரும் நிலவிற் பெறுபயன் துய்த்துப் பெருமகிழ் வெய்தினர். வந்தயர்ந்த விருந்தினரும் பகலும் ஓய மணங்கண்டு மேற்றிசையில் கதிரோன் சாயச் சந்தனத்துப் பொதியமலைப் பிறந்த தென்றல் தண்மலர்கள் பலநீவி உலவி நிற்கப் பந்துருண்டு வந்ததென மதியம் வானில் படர்ந்துவரும் முகிலுக்குள் தவழ்ந்து செல்ல முந்துமிரு நெஞ்சங்கள் துடித்து நிற்க முதலிரவு வந்ததுவே இன்பம் நல்க!164 பூமணமும் புகைமணமும் துதைந்து சுற்றும்; புகுமிடங்கள் ஒப்பனையாற் பொலிந்து முற்றும்; தூமலரின் சரங்களெலாம் அசைந்தி ருக்கும்; தூவியுடன் பூவிதழும் கலந்தி ருக்கும் காமமுறு பஞ்சணையும் விரித்தி ருக்கும்; கட்டிலொடு கண்ணாடி இணைந்தி ருக்கும்; தாமரைபோல் அமைந்தஒளி விளக்கி ருக்கும்; தண்ணியமென் தென்றல்வர வழியி ருக்கும்;165 பாலிருக்கும், வகைவகையாய்ச் சுவைகள் நல்கும் பழமிருக்கும், பக்கமெலாம் எழிலி ருக்கும்; மேலிருக்கும் கூரையெலாம் வரைந்தி ருக்கும் மேன்மைபெறும் ஓவியங்கள் நிறைந்தி ருக்கும்; சேலிருக்கும் புனலலைகள் நெளிதல் போலத் தென்றலிலே திரைச்சீலை அசைந்தி ருக்கும்; வேலிருக்கும் விழியாளும் வேழன் றானும் விரிந்திருக்கும் மாளிகையுட் புகுந்தி ருந்தார்.166
துதைந்து - நெருங்கி, தூவி - அன்னத்தின் மெல்லிறகு சேல் - கயல் |