332 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
புகுந்தவர்தாம் புதுமைமிகும் உலகிற் சென்று புக்கவர்போல் அமர்ந்திருந்தார்; இருவர் நெஞ்சும் தகுந்தகுமென் றாசையினால் படப டத்துத் தாளமிட உணர்ச்சிகொண்டார்; வடுவின் காயை வகுந்ததெனும் விழியாலே அவன்ந லத்தை வாரியுண்டாள்; அவனுந்தன் விழிம லர்த்தி நகுங்கமல முகத்தாளின் அழகை எல்லாம் நனியுண்டு மயங்கிமனங் களித்தி ருந்தான்.167 கையொன்றால் சேயிழையின் மென்தோள் பற்றிக் கன்னத்தை மற்றொன்றால் தொட்டான்; அந்தக் கையொன்றா முன்னமவள் நாணங் கொண்டு காளையவன் தடந்தோளில் முகம்பு தைத்தாள்; மெய்யொன்றும் பொழுதத்தில் இருவர் தாமும் மேனாளிற் கண்டறியா இன்பங் கண்டார்; பொய்யென்றார் இவ்வாழ்வை அறியா மாந்தர்; புதுமையிது புதுமையிது என்று வந்தார்.168 காணாத இன்பத்தான் அவள்பாற் கொய்யாக் கனிகொய்தான்; முகஞ்சிவந்து பெண்மை நாணம் பூணாகக் கொண்டவளும் கொழுநன் றன்னைப் பூங்கொடிபோல் தன்னுடலால் தழுவிக் கொண்டாள்; ‘பாணாக வண்டார்க்கும் பொய்கைப் பக்கம் பார்த்தென்பாற் பூங்கொடியை வேண்டி நின்றீர்! நாணாளும் நுமைப்பற்றிப் படர்ந்து வாழும் நல்லகொடி யாகிவிட்டேன் கொள்க’ என்றாள்.169 பாலறியார் பழமறியார் ஆனால் அந்தப் பாற்சுவையும் பழச்சுவையும் நன்கு ணர்ந்தார்; நூலறியார் கவிநுகரப் புகுதல் போல நுழையினும்பின் சொலற்கரிய இன்பங் கண்டார்; வேலறிவான் வாளறிவான் எனினும் இன்று வேலறியாக் களங்கண்டான்; வெற்றி கண்டான்; மாலவள்தன் விழிவேலால் தோற்புங் கண்டான்; வளர்நிலவுப் பயன்முழுதும் வாரி யுண்டான்.170
வடு - மாவடு, வகுந்தது - பிளந்தது. பாண் - பாடல், நாணாளும் - நாளெல்லாம் மாலவள் - இன்பமயக்க முடையவள். |