இயல் - 41 புணர்ந்து திகழ்ந்தேன் பூவையின் நலத்தை உணர்ந்து புகழ்ந்தான் ஒண்டொடி மகிழ்ந்தாள். ‘புலனைந்தாற் பெறுமின்பம் அனைத்தும் என்றன் பூங்கொடிபால் நுகர்ந்ததனுள் திளைத்தேன்; நல்ல குலனுவந்த நினைக்கண்டு கொண்ட காதற் கொடுநோய்க்கு நீயேநன் மருந்தாய் நின்றாய்! கலன்சுமந்த மென்தோளில் துயிலும் இன்பம் கண்காணாத் துறக்கத்தை விஞ்சக் கண்டேன்! நலனுகர்ந்து விலகுங்கால் சுடுதல் கண்டேன் நண்ணுங்கால் தண்ணென்னும் விந்தை கண்டேன்! 171 நின்னலனை அறிதோறும் முன்னர் என்பால் நின்றிருந்த அறியாமை கண்டேன்’என்று பொன்னனையாள் புணர்ச்சியினால் மகிழ்ந்து ரைத்தான்; புரிநகையில் முல்லையுடன் கொவ்வை கண்டேன் மின்னுமொளி மேனியினில் தளிரைக் கண்டேன் மீன்விழியில் குவளைமலர் மிளிரக் கண்டேன் சின்னஒரு மின்னலிடை துவளக் கண்டேன் செய்யமலர் நின்முகத்தில் மலரக் கண்டேன்.172 முகிலிடையே மலர்முல்லை கண்ட தில்லை மொய்குழலில் அம்முல்லை மலரக் கண்டேன்; துகிலுடைய மாங்கனியைக் கண்ட தில்லை தோள்தொட்ட பின்னரதைக் கண்டு கொண்டேன்; நகையுடைய முல்லைக்கு வரிசை யில்லை நானின் றவ் வரிசைதனை நின்வாய்க் கண்டேன்; புகலரிய இனிமைக்கு வடிவமில்லை பூமகளே நின்னுருவில் அதனைக் கண்டேன்.173
கலன் - அணிகலன் துறக்கம் - சுவர்க்கம் செய்யமலர் செந்தாமரை முகில் - மேகம், துகில் - ஆடை, நகை - ஒளி. |