பக்கம் எண் :

334கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

வானத்து முழுமதிதான் நின்மு கத்து
      வடிவழகுக் கொப்பாகத் தவங்கி டக்கும்;
மீனத்து நடுவிலது மேன்மை பெற்றும்
      மேற்பொருந்தும் களங்கத்தால் உவமை யாகா
மானத்து நல்லுணர்வால் வெட்கி யங்கு
      மாமுகிலுட் புகுத்தொழிந்து போதல் காண்பாய்!
நானத்தும் எழிலுருவப் பாவாய்! நின்றன்
      நலத்தைஎலாம் எவ்வண்ணம் புகழ்வேன்’ என்றான்174

உணர்ச்சியினால் மெய்தழுவி என்றுங் காணா
      உலகினுக்கு மாவேழன் அழைத்துச் சென்று
புணர்ச்சியினால் அவன்திளைத்து மகிழ்ந்து ரைத்த
      புகழ்மொழிகள் அத்தனையும் மயங்கிக் கேட்டாள்;
உணற்குரிய நலமெல்லாம் உண்ட பின்னர்
      உவந்துதலம் பாராட்டி உரைத்த சொல்லால்
துணர்க்கொடியின் மெல்லிடையாள் துவண்டி ருந்தாள்
      தொல்லுலகைத் தன்னிலையை மறந்தி ருந்தாள்.175

புகழ்மொழிகள் தரும்மயக்கம் வேழன் தந்த
      புணர்ச்சியினால் வரும்மயக்கை விஞ்சி நிற்கும்;
புகழ்மொழிகள் தந்நலத்தை வெறுத்து விட்ட
      பொதுநலத்துத் தொண்டரையும் மயக்கு மென்றால்
வகிர்வடுவின் விழிமகளிர் நெஞ்சை மட்டும்
      வாட்டாமல் வளைக்காமல் விட்டா போகும்?
திகழ்மலர்கள் உதிர்ந்திருக்கும் அணையின் மீது
      திருமகளும் சொக்கியிமை குவித்தி ருந்தாள்.176

ஆண்மைக்கோர் உவமைசொலும் உலக வீரன்
      ஆணழகன் மாவேழன் என்னும் நம்பி,
வாண்மைக்கண் மாதரசி பாரில் இல்லா
      வடிவழகி வேல்விழியாம் நங்கை, அன்புக்
கேண்மைக்கோர் இலக்கியமாய் இல்ல றத்துக்
      கிழமைக்கோர் இலக்கணமாய் வாழ்ந்து வந்தார்
வேண்மைக்கோர் உறுபயனைக் காதல் வாழ்வின்
      விளைவுதனைக் கண்டுவக்கும் வாய்ப்பும் பெற்றார்.177

திருமணப்படலம் முற்றும்


மீனம்-விண்மீன்கள். நானத்தும்-நான் நத்தும், வாண்மைக்கண்-வாள்போன்ற மைபூசிய கண்கள். வேண்மை-விரும்புந்தன்மை.