பக்கம் எண் :

336கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 42

மயங்கினள் ஒருநாள் மாது
வாடினன் வேழன்அப் போது.

மாடத்து நிலவரங்கில் ஒருநாள், காதல்
      மணிப்புறவாய் அவ்விருவர் மகிழும் போது
கூடத்துச் சென்றவள்வாய் குமட்டி நின்றாள்;
      கொடுவேலான் பதைத்தோடித் தோள்கள் பற்றிப்
பீடத்தின் பஞ்சணையின் சேக்கை சேர்த்தான்;
      பேதையதன் மிசைமயங்கிக் கொடிபோற் சாய்ந்தாள்;
வாடத்தன் காதலிக்கு வந்த தென்கொல்?
      வாய்குமட்டி நின்றதென்கொல்? எனத்துடித்தான்.178

மெல்லியகால் சுரந்துசிறி ததைத்தி ருக்க
      மேனியெலாம் பசந்ததுபோல் தளர்ந்தி ருக்க,
வல்லியவள் முகஞ்சிறிது செம்மை மாறி
      வாட்டமுடன் விளர்த்திருக்கக் கண்டான்; போரிற்
கொல்லியலின் திறங்கண்டும் இளகா நெஞ்சன்
      கோதையிவள் நிலைகண்டே இளகி விட்டான்;
வல்லினமும் மெல்லினத்தைக் கூடுங் காலை
      வலிகுறைந்து மென்மைபெறல் உண்மை யன்றோ!179

குளிர்புனலை மலர்முகத்தில் தெளித்தான்; சற்றே
      குறைவுபட மயக்கொழிந்து தெளிந்தாள்; ‘நிள்றன்
தளர்நிலையைக் கண்டுள்ளம் நடுங்கி விட்டேன்
      தளிர்மேனிக் கிந்தநிலை வந்த தென்கோல்?
விளரியதுன் முகமென்கொல்?’ எனப்ப தைத்து
      வினவியவற் ‘கொன்றுமிலை’ என்று சொல்லி,
முளரிமுகம் ஒருசிறிது கவிழ்த்து, நாணி,
      முறுவலித்து, வேல்விழியாள் அகன்றாள் ஆங்கே.180


முளரி - தாமரை.